திங்கள், 14 மார்ச், 2011

குறை மாதக்குழந்தைகள்

வளர்ச்சியடைந்த குழந்தை என்பது 40 வாரம் முழுமையாக தாயின் கர்ப்பத்தில் இருந்தபின் பிறப்பது, அதற்கு முன் 2 வாரம் வரையும் கூட முழு வளர்ச்சியடைந்த குழந்தைதான். ஆனால் 27 வாரம் முதலே பல்வேறு காரணங்களினால் குழந்தை பிறப்பதுண்டு. அவ்வாறு முழு வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தைகள் குறைமாத குழந்தைகள் (pre term baby)எனப்படும்.

இந்தக்குழந்தைகளை வளர்த்த மிகவும் கவனமும், பொறுமையும் தேவை. எடை குறைவாக இருப்பதால் அதன் உறுப்புகள் நாம் உணரும்படிதான் இருக்கும். அம்மாக்கள் இதற்கு பயப்படவே அவசியம் இல்லை. குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் போது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....


முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:

மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலைப் போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய காட்டன் துணியால் வலை போர்த்தி வையுங்கள். மேலும் தாயின் வயிற்றில் இருக்கும் கதகதப்பான உணர்வு அதற்கு இருக்க வேண்டும். அதனால் ஒரு டேபிள் லாம்ப் வாங்கி அதில் டிவி பல்ப் ( கடைகளில் கிடைக்கும்) ஒன்று பொருத்தி, அந்த வெளிச்சம் குழந்தை மேல் படும் படி செய்யவும். அந்த வெப்பம் குழந்தையை கதகதப்பாக உணர செய்யும். குறை மாத குழந்தைகள் வெகு நேரம் விழித்து இருக்காது, எப்போதும் தூக்கத்தில் தான் இருக்கும். அது சராசரியான எடை வரும் வரை இந்நிலை தொடரும். முடியும் போது ஒரு நாளின் குறிப்பிட நேரம் ஒதுக்கி உங்கள் உடலோடு அந்த குழந்தையை இறுக்கி அனைத்து கொள்ளுங்கள், இது அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எப்போதும் கதகதப்பான உடைகளை - வெயில் காலமானாலும் போட்டுவிடுங்கள். காலுக்கு சாக்ஸ் அவசியம்.

குளியல் முறை: (முதல் மூன்று மாதம்)

தினமும் ஒரே நேரத்தில் குளிக்க வைப்பது நல்லது. குளிக்கும் போது தேவையான பொருட்கள்:

ரப்பர் ஷீட், பெரிய டப், சிறிய டெர்ரி டவல், பேபி சோப்பு, பஞ்சு, சிறிய காட்டன் துண்டு,

அறையில் சாதாரண வெப்ப நிலையில் ரப்பர் ஷீட் விரித்து குழந்தையை அதில் படுக்க வைக்கவும். டப்பில் வெதுவெதுப்பான தண்ணீர் போதும்.

* முதலில் பஞ்சில் சிறிது நனைத்து குழந்தையின் காது, கண்கள், உதடு, பிறப்புஉறுப்புகள், முதலியவற்றை மிருதுவாக துடைக்கவும்.
*சிறிய டெர்ரி டவலை நனைத்து உடலை மிருதுவாக துடைக்கவும்.
* சோப்பு கையில் தடவி மிருதுவாக துடைத்து எடுக்கவும்.
* மீண்டும் நனைத்த டவலால் துடைத்து எடுக்கவும்.
*காட்டன் துண்டை நனைத்து குழந்தையின் தலையை துடைக்கவும்.

கண்டிப்பாக பயன் படுத்த கூடாதவை:

ஆயில், பவுடர், பேபி கிரீம், லோஷன், ஷாம்பூ, மை, பொட்டு.

கவனத்தில் கொள்ளுங்கள்:

*குழந்தையின் சருமம் வறண்டு ருந்தால், சிறிது நல்ல எண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெய் குளிப்பதற்கு முன் தடவி விடவும்.
* ஒவ்வொரு முறை மலம் கழித்ததும் பஞ்சினால் துடைத்து விடவும். கண்டிப்பாக வெட்நாப்கின் வேண்டாம்.
* குழந்தைக்கு சாம்பிராணி புகை வேண்டவே வேண்டாம்.

முக்கியமாக யாரிடமும் குழந்தையை தரவேண்டாம், யாராவது பார்க்க வந்தால் அவர்களை குழந்தையை தொட அனுமதிக்காதீர்கள். முத்தம் கண்டிப்பாக கூடாது. இந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே இருக்காது. ஆகையால் இவற்றை கண்டிப்பா கடைபிடியுங்கள். விமர்சனங்களை தூரப்போடுங்கள், உங்கள் குழந்தை மட்டுமே இப்போது முக்கியம்.


உணவு முறை:

சிறிய குழந்தையாக இருப்பதால் அதற்கு நேரடியாக பால் குடிக்க முடியாது, ஆகையால் பாலை வேறு கிண்ணத்தில் எடுத்து சங்கு மூலம் ஊற்றுங்கள், சப்பி குடிக்கவும் வையுங்கள். தாய் பால் தவிர வேறு எதுவும் நினைத்து கூட பர்ர்க்க வேண்டாம்.

மருத்துவ ஆலோசனை.

எந்த சிறு பிரச்சனையாக இருந்தாலும் நீங்களா முடிவு எடுக்கவோ, மருந்து கொடுக்கவோ வேண்டாம். மருத்துவரை அணுகவும்...

நான்காம் மாதம் முதல் எட்டாம் மாதம் வரையான பராமரிப்பும், வரும் நோய்கள் பற்றியும் அடுத்த பதிவில்...

வெள்ளி, 4 மார்ச், 2011

குழந்தைகளின் உணவு


ஒரே இட்லி, தோசை நாமே தினம் சாப்பிட யோசிக்கிறோம், ஆனால் குழந்தைகள் மட்டும் நாம் என்ன திணித்தாலும் விழுங்கிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது...# பெற்றோராதிக்கம். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது தேவை பொறுமை,  

இன்றைக்கு உணவு முறைகளை பார்க்கலாம்:


கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வரை கொடுக்கணும். அதுவும் பிறந்ததும் வெளிப்படும் சீம்பால் எனப்படும் மஞ்சள் பாலில் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி உள்ளது. ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடிந்ததும், சிறு கப்பில் வென்னீர் வைத்து ஒரு துணியால் குழந்தையின் உதடுகளை நன்றாக துடைக்க வேண்டும், இல்லாவிட்டால் குழந்தையின் உதடுகள் நாளடைவில் கருத்துபோகும். அதே போல் பால் கொடுக்கும் முன்னும் பின்னும் தாயின் மார்புக்காம்புகளையும் வென்னீரில் துடைக்க வேண்டும், தேவையற்ற நோய்த்தொற்றை தடுக்க உதவும்.பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6 மாதம் முதல்:

ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். முளை கட்டிய சாது மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை குடுக்க வேண்டும். முக்கியமா கவனிக்க வேண்டியது ஒரு புது உணவு குடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக படுத்த கூடாது. அப்போதுதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிக கொஞ்சம் அடுத்த நாள் அளவு கூட்டி தர வேண்டும்.

7, 8 மாதங்கள்:

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம் ஆப்பிள், வேகவைத்து மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு, ரொட்டி பால், உப்பு பிஸ்கட் ஊற வைத்து கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமா கொடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுங்கள். பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்த, சிறிது நெய்யில் சீரகத்தூள், கடுகு, தாளித்து கொடுக்கலாம். பசும்பால் அறிமுகபடுத்துங்கள்.

9. ,10 மாதம்:

இப்போது, இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.

11, 12 மாதங்கள் :

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டு குழந்தைக்கு பழக்கபடுத்துங்கள்.

எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்காதீங்க. அப்பறம் சாப்பிடவே பழகாது. குறைவாக இருந்தாலும் பார்க்கும் போதே சாப்பிட துண்டும் வகையிலும், சத்துள்ள தாகவும் கொடுங்கள். முக்கியமா குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்ளுங்கள். அதை அடிக்கடி சுட்டு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை என்று கவலை பட்டு ஒன்றும் போவதில்லை. உணவு வகைகளை மாற்றி, அடிக்கடி கொடுங்கள்.

உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.


7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால்:-எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,
8 மணி - குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்க குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.
8.30 - காலை உணவு - திட உணவாக இருக்கட்டும்
10.30 - தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.
12 - திட உணவு
4 மணிவரை எதுவும் தேவை இல்லை. அப்பறம் பால் கொடுங்கள், கூட இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு.
7.30 மணிக்கு முழு திட உணவு கொடுங்கள்.
9 மணி மீண்டும் பால். இதற்க்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.

இப்ப வயிறு நிறைந்து இருக்கும், குழந்தை நடுவில் எழுந்து கொள்ளாது. தேவை இல்லாமல் அதற்கு நடு இரவில் பால் கொடுத்து பழக்காதீர்கள். 8 மாதம் பிறகு வளர்ந்த குழந்தையாக நினைத்தால் எல்லா பழக்கமும் சொல்லி தர முடியும்.

இதெல்லாம் என் சொந்த அனுபவம், என் குழந்தைகள் நடு இரவில் அழுததே இல்லை. காரணம் வயிறு நிறைந்த உணவு நல்ல தூக்கம் கொடுக்கும் தானே?

டிப்ஸ்: அம்மாகளுக்கு பால் கட்டி இருந்தால், ஒரு பாத்திரத்தில் உங்களால் பொறுத்து கொள்ள கூடிய அளவு சுடுதண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரும் வைத்து கொள்ளுங்கள். இரண்டிலும் ஒரு சின்ன டவல் போட்டு இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி துணியை தண்ணீருடன் எடுத்து பத்து போட்டது போல் போடுங்கள். தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் குளிக்கும் போதும் செய்தல், கட்டிய பால் தானாகவே வெளியேறும். பிறகுதான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

புதன், 2 மார்ச், 2011

சின்னச்சின்ன வியாதிகள்

முதலில் ஒரு விஷயம், உங்கள் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று நீங்கள் மட்டும் தீர்மானம் பண்ணுங்கள். ரொம்ப குண்டா இருக்கும் குழந்தை தான் அழகோ, ஆரோக்கியமோ அல்ல. மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து மட்டும் கேளுங்கள். உடனே செயல் படுத்த முற்ப்படாதீர்கள். நம் பாட்டி காலம் வேறு, நம் அம்மாவின் காலமும் வேறு, ஏன் நம் சின்ன வயதில் இருந்தது போலவா இப்போது குழந்தைகள் இருக்கிறார்கள். கால கட்டங்களின் மாறுதலுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக மாறித்தான் வேண்டும்.

பொதுவாகவே நாட்டு மருந்துகள் இப்போதைய சுழலில் நன்றாக தெரியாமல் கொடுப்பது நல்லது அல்ல. ஆனாலும் எப்போதும் அலோபதி மருந்தும் நல்லது அல்ல. முடிந்தவரை குறைந்த அளவில் மருந்து கொடுத்து பழகுங்கள்.

காய்ச்சல் : குழந்தைகள் காய்ச்சல் வந்தால் மிகவும் சோர்ந்து போவார்கள். முதலில் அவர்கள் நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டும். காய்ச்சல் தான கண்ணு சரியாய் போய்டும், இந்த ரச சதம் சாப்பிட்டு, நல்ல ரெஸ்ட் எடு என்று தான் ஆரம்பிக்கவேண்டும். ஐயோ என்று நாம் டென்ஷன் ஆவதில் அர்த்தம் என்ன?

அவர்களுக்கு மிதமான சூட்டில் உடம்புக்கு குளிக்க செய்து, அவர்களுக்கு பிடித்த சவுகர்யமான ஆடை அணிந்து, ரச சத்தமோ, ரொட்டியோ, பாலோ கொஞ்சம் சாப்பிட கொடுங்கள், மருந்தும் கொடுங்கள். அதை விட முக்கியம் சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சுடு தண்ணீரை ஆற வைத்து அதில் ஜூஸ் பிழிந்து கொடுங்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் நிம்மதியா தூங்கினாலே பாதி சரியாய் போகும்.

மிக சிறிய குழந்தை எனில் உடல் சுடு அதிகம் இருந்தால் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதன் இரு அக்குளும் தலையும் சேர்த்து சில நிமிடம் வைத்து, பிறகு துடைத்து விடுங்க.

சளி: உண்மைகளில் சளிக்கும் குளிப்பதற்கும் சம்மந்தமே இல்லை. தலயில் ஈரம் இல்லாமல் பார்த்து கொண்டால் போதும். மிளகு , பனங் கற்கண்டு, திப்பலி பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ( செய்முறை தனியாக எழுதுகிறேன்)

மிக சிறிய குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கலாம், மிக பொறுமையாக கொடுக்கணும். இல்லேன்னா ஒரு பெரிய வெற்றிலை எடுத்து சிறிது நல்ல எண்ணெய் தடவி விளக்கு திரியில் லேசாக சூடு பண்ணி குழந்தையின் நெஞ்சில் பற்று போடுங்கள், சளி வெளியில் வாந்தியவோ, மலத்திலோ வெளியே வரும்.

லூஸ் மோஷன் : இது தான் கொஞ்சம் டேஞ்சர் ,முடிந்த வரை டாக்டரிடம் எடுத்து சென்று விடுங்கள்.

வயது வாரியாக பார்க்கலாம்.
அதற்கு முன்: குழந்தைகளை பார்க்கும் அதே கவனத்துடன் நம்மையும் பார்த்துக்கணும்.

இன்றைய டிப்ஸ்: கர்ப்பமாக இருக்கும் பொது, எப்போ தெரியுதோ அப்போதிருந்து moisturex என்னும் கிரீம் வயிற்றில் தடவி வந்தால் வரிவரியான தழும்புகள் இருக்காது. அல்லது விட்டமின் ஈ ஆயில் கூட தடவலாம். பிரசவத்திற்கு பின் இருக்கும் தழும்புகள் உடனே போகாது, ஆனாலும் தினமும் சிறிது நல்லெண்ணையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து வயிறில் தடவி பிறகு குளித்தால் கொஞ்ச நாளில் போய்விடும்

(அம்மாக்கள் வலைப்பூவில் எழுதியது)

செவ்வாய், 1 மார்ச், 2011

ங்ஙா,,,,,,,,தெய்வமொழி

எல்லாத்துக்கும் ரெஃபரன்ஸ் தேடும் காலத்தில் குழந்தைகளை பற்றி நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டவைகளை இந்த வலைப்பூவில் பகிரலாம் என்று இருக்கிறேன். ஏற்கனவே அம்மாக்களின் வலைப்பூவில் எழுதிய்வைகளையும் சேர்த்து. எனக்கு திரும்பவும் அந்த நாட்களை நினைவு படுத்திக்கொள்ளவும், என் இரு பெண் குழந்தைகள் வளரும் இந்த நாட்களை பதியவும் இந்த பகுதி. நான் எப்பவும் ஒரு பாசிட்டிவ் அம்மாவா இருக்கவே ஆசைப்படுகிறேன். வெறும் குழந்தை வளர்ப்பு மட்டும் அல்ல எனக்கு தெரிந்த, தெரியவரும் அனைத்தும் பதிவிடுவேன். என் குட்டிஸின் சுயபுராணம் இதில வராது. :)

என் அம்மாவோ, பெரியவர்கள் யாரும் இல்லாமல் ரெண்டு குழந்தைகளை இதுவரை மிக அருமையா வளர்த்திருக்கேன்.அந்த ஒரு தகுதி போதும் என்று........