திங்கள், 14 மார்ச், 2011

குறை மாதக்குழந்தைகள்

வளர்ச்சியடைந்த குழந்தை என்பது 40 வாரம் முழுமையாக தாயின் கர்ப்பத்தில் இருந்தபின் பிறப்பது, அதற்கு முன் 2 வாரம் வரையும் கூட முழு வளர்ச்சியடைந்த குழந்தைதான். ஆனால் 27 வாரம் முதலே பல்வேறு காரணங்களினால் குழந்தை பிறப்பதுண்டு. அவ்வாறு முழு வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தைகள் குறைமாத குழந்தைகள் (pre term baby)எனப்படும்.

இந்தக்குழந்தைகளை வளர்த்த மிகவும் கவனமும், பொறுமையும் தேவை. எடை குறைவாக இருப்பதால் அதன் உறுப்புகள் நாம் உணரும்படிதான் இருக்கும். அம்மாக்கள் இதற்கு பயப்படவே அவசியம் இல்லை. குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் போது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....


முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:

மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலைப் போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய காட்டன் துணியால் வலை போர்த்தி வையுங்கள். மேலும் தாயின் வயிற்றில் இருக்கும் கதகதப்பான உணர்வு அதற்கு இருக்க வேண்டும். அதனால் ஒரு டேபிள் லாம்ப் வாங்கி அதில் டிவி பல்ப் ( கடைகளில் கிடைக்கும்) ஒன்று பொருத்தி, அந்த வெளிச்சம் குழந்தை மேல் படும் படி செய்யவும். அந்த வெப்பம் குழந்தையை கதகதப்பாக உணர செய்யும். குறை மாத குழந்தைகள் வெகு நேரம் விழித்து இருக்காது, எப்போதும் தூக்கத்தில் தான் இருக்கும். அது சராசரியான எடை வரும் வரை இந்நிலை தொடரும். முடியும் போது ஒரு நாளின் குறிப்பிட நேரம் ஒதுக்கி உங்கள் உடலோடு அந்த குழந்தையை இறுக்கி அனைத்து கொள்ளுங்கள், இது அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எப்போதும் கதகதப்பான உடைகளை - வெயில் காலமானாலும் போட்டுவிடுங்கள். காலுக்கு சாக்ஸ் அவசியம்.

குளியல் முறை: (முதல் மூன்று மாதம்)

தினமும் ஒரே நேரத்தில் குளிக்க வைப்பது நல்லது. குளிக்கும் போது தேவையான பொருட்கள்:

ரப்பர் ஷீட், பெரிய டப், சிறிய டெர்ரி டவல், பேபி சோப்பு, பஞ்சு, சிறிய காட்டன் துண்டு,

அறையில் சாதாரண வெப்ப நிலையில் ரப்பர் ஷீட் விரித்து குழந்தையை அதில் படுக்க வைக்கவும். டப்பில் வெதுவெதுப்பான தண்ணீர் போதும்.

* முதலில் பஞ்சில் சிறிது நனைத்து குழந்தையின் காது, கண்கள், உதடு, பிறப்புஉறுப்புகள், முதலியவற்றை மிருதுவாக துடைக்கவும்.
*சிறிய டெர்ரி டவலை நனைத்து உடலை மிருதுவாக துடைக்கவும்.
* சோப்பு கையில் தடவி மிருதுவாக துடைத்து எடுக்கவும்.
* மீண்டும் நனைத்த டவலால் துடைத்து எடுக்கவும்.
*காட்டன் துண்டை நனைத்து குழந்தையின் தலையை துடைக்கவும்.

கண்டிப்பாக பயன் படுத்த கூடாதவை:

ஆயில், பவுடர், பேபி கிரீம், லோஷன், ஷாம்பூ, மை, பொட்டு.

கவனத்தில் கொள்ளுங்கள்:

*குழந்தையின் சருமம் வறண்டு ருந்தால், சிறிது நல்ல எண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெய் குளிப்பதற்கு முன் தடவி விடவும்.
* ஒவ்வொரு முறை மலம் கழித்ததும் பஞ்சினால் துடைத்து விடவும். கண்டிப்பாக வெட்நாப்கின் வேண்டாம்.
* குழந்தைக்கு சாம்பிராணி புகை வேண்டவே வேண்டாம்.

முக்கியமாக யாரிடமும் குழந்தையை தரவேண்டாம், யாராவது பார்க்க வந்தால் அவர்களை குழந்தையை தொட அனுமதிக்காதீர்கள். முத்தம் கண்டிப்பாக கூடாது. இந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே இருக்காது. ஆகையால் இவற்றை கண்டிப்பா கடைபிடியுங்கள். விமர்சனங்களை தூரப்போடுங்கள், உங்கள் குழந்தை மட்டுமே இப்போது முக்கியம்.


உணவு முறை:

சிறிய குழந்தையாக இருப்பதால் அதற்கு நேரடியாக பால் குடிக்க முடியாது, ஆகையால் பாலை வேறு கிண்ணத்தில் எடுத்து சங்கு மூலம் ஊற்றுங்கள், சப்பி குடிக்கவும் வையுங்கள். தாய் பால் தவிர வேறு எதுவும் நினைத்து கூட பர்ர்க்க வேண்டாம்.

மருத்துவ ஆலோசனை.

எந்த சிறு பிரச்சனையாக இருந்தாலும் நீங்களா முடிவு எடுக்கவோ, மருந்து கொடுக்கவோ வேண்டாம். மருத்துவரை அணுகவும்...

நான்காம் மாதம் முதல் எட்டாம் மாதம் வரையான பராமரிப்பும், வரும் நோய்கள் பற்றியும் அடுத்த பதிவில்...